கடந்த ஐந்தாண்டில், அரசியலில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய லாலு பிரசாத், இப்போது இடிந்து போயிருக்கிறார். ராஷ்டிரிய ஜனதா தளத்தில், தனக்கு பக்கபலமாக இருந்த தலைவர்கள் எல்லாம், ஐக்கிய ஜனதா தளத்துக்கு போய்க்கொண்டிருக்கின்றனர் என்ற கவலை, அவரை முடக்கிப்போட்டு விட்டது. கட்சியை தக்க வைத்துக்கொள்வதே பெரிய பாடாய் உள்ளது. இந்த நிலையில், புதிய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, என்னவெல்லாம் செய்து, தான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளை எல்லாம், தவிடுபொடி ஆக்கப்போகிறாரோ என்ற பயமும் இருக்கிறது லாலுவுக்கு. பீகாருக்கு லாலு ஒதுக்கியிருந்த திட்டங்களை எல்லாம், மேற்குவங்கத்துக்கு மாற்றப்போகிறார் மம்தா என்று கேள்விப்பட்டதும், ஆடிப்போய் விட்ட லாலு, நிதானித்து, உடனே டில்லிக்கு கிளம்பினார். எந்த தயக்கமும் இன்றி, மம்தாவை போய்ப் பார்த்தார். "பீகாருக்கு ஒதுக்கிய திட்டங்களை மாற்ற வேண்டாம்; அதனால் என் அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும்' என்று வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டார். மம்தாவும், சிரித்தபடியே தலையாட்டி விட்டார். லாலு இப்போது சாது!

0 comments:

Post a Comment