மும்பையில் இருந்து புனே, ராஜ்கோட், புதுடெல்லி மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரெயில்களில் சாதாரண வகுப்பு பெட்டிகளில் பயணிகளிடம் ஒருவர் மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் டிக்கெட் இருப்பவர்களிடம் உடைமை மற்றும் பொருட்களில் எடை அதிகமாக இருக்கிறது என்று கூறி அவர்களது பொருட்களை எடுத்து செல்வதாகவும் கல்யாண் ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து கல்யாண் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.எஸ். குரோஷி உத்தரவின் பேரில் நீண்ட தூர ரெயில்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது செகந்திராபாத்- ராஜ்கோட் ரெயிலில் பயணிகளிடம் தகராறு செய்து கொண்டிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அந்த நபர் தான் டிக்கெட் பரிசோதகர் என்று கூறினார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவருடைய பெயர் ஆபிரகாம் போல்ஸ் ஜேம்ஸ் என்றும் உல்லாஸ் நகரில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
ஆபிரகாம் வைத்திருந்த டிக்கெட் பரிசோதகருக்கான அடையாள அட்டை மும்பை பைகுல்லா ரெயில்வே பணிமனையில் பணிபுரியும் எல்.பி. கோல்கர் என்பவருடையது. இந்த அடையாள அட்டையை ரெயிலில் பயணித்த போது ஆபிரகாம் எடுத்துள்ளார்.
உடனே ஆபிரகாமுக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றியது. அதனால் அடையாள அட்டையில் இருந்த போட்டோவை எடுத்துவிட்டு தன்னுடைய புகைப்படத்தை ஒட்டினார். அதனைக் கொண்டு தொலை தூர ரெயில்களில் செல்லும் பயணிகளிடம் தான் டிக்கெட் பரிசோதகர் என்று கூறியதோடு சோதனை செய்வது போல் நடித்து பணம் மற்றும் பொருட்களை பறித்து வந்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஆபிரகாமை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். ஆபிரகாம் மாதிரி வேறுயாராவது இருக்கலாம் என்பதால் ரெயில்வே போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

0 comments:

Post a Comment