எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம் பித்தார், ஆட்சியையும் பிடித்தார். அவரைத் தொடர்ந்து சிவாஜி கணேசனும் கட்சி ஆரம்பித்துப் பார்த்தார்; போணியாகவில்லை. மிகச் சிறந்த நடிகராக ஏற்றுக் கொண்ட மக்கள், அவரை மிகச் சிறந்த தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை.


சமீபத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்திருக்கிறார். தி.மு.க., - அ.தி.மு.க.,வின் லாவணி அரசியலால் வெறுப்படைந்த மக்கள், அவரைச் சற்று கவனிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

தெளிவான கொள்கைகளும், தீர்க்கமான சிந்தனைகளும், அறிவுப்பூர்வமான நடைமுறைகளும் தான் ஒரு இயக்கத்தை உயிர்ப்புள்ளதாக வைத்திருக்கும் என்பதை விஜயகாந்த் இன்னும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவரும் பேசியதையே பேசி சலிப்படையச் செய்கிறார்.இந்நிலையில், நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.ஒரு காலத்தில் காந்தி, நேரு, நேதாஜி, வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்றோர் எல்லாம், அரசியலை ஒரு தியாக களமாகப் பார்த்தனர். அதனால் தான் பிரிட்டிஷார் அளித்த தண்டனைகளைக் கூட சிரித்த முகத்தோடு ஏற்றுக் கொண்டனர்.

தற்போது கட்சி ஆரம்பித்துள்ள அல்லது ஆரம்பிக்கத் துடிக்கிற நடிகர்கள் எல்லாம், சினிமாவில் சம்பாதிக்க முடியாததை அரசியலில் சம்பாதித்து விடலாம் என்று கருதுகின்றனர். அந்த ஆசையுடன் அரசியலை ஒரு வியாபார ஸ்தலமாகவும், வேட்டைக்களமாகவுமே பார்க்கின்றனர்.நாலு படம் ஓடிவிட்டால், இனி அடுத்த முதல்வர் நான் தான் என்று அலைபாய்கின்றனர். கொடியும், கொடியேற்ற நாலு பேரும் இருந்து விட்டால் கோட்டைக்கனவுகள் இவர்களுக்கு வந்து விடுகிறது.

ஒரு நாள் சிறை வாசத்திற்கே ஓடி ஒளிந்து விடும் சுகவாசிகளான இவர்கள், அரசியலுக்கு வந்து என்ன தியாகம் செய்யப் போகின்றனர்? கும்பகோணம் பள்ளி தீ விபத்திற்காக நடிகர்கள், ஆளாளுக்கு லட்சங்களை அறிவித்தனர்; எத்தனை பேர் கொடுத்தனர்? இலங்கைத் தமிழர் இன்னல் தீர்க்க, முதல்வரிடம் பலர் நிதி கொடுத்தபோது, இன்று அரசியலுக்கு வரத் துடிக்கிற இளைய தளபதி கொடுத்தது எவ்வளவு தெரியுமா? வெறும் ஒரு லட்ச ரூபாய்.


இதனால் எழுந்த அதிருப்தியை மறைக்க, ஒருநாள் அடை யாள உண்ணாவிரதம் இருந்தார். எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி, கறுப்பு எம்.ஜி.ஆர்., சின்ன எம்.ஜி.ஆர்., என்று பொய் முகம் தரித்து, புதுப்புது எம்.ஜி.ஆர்.,கள் படையெடுக்கின்றனர். இனிமேல் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

1 comments:

Theesan said...

நன்று சொன்னீர்கள்

Post a Comment