குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள், பாறை சந்தில் சிக்கி, 37 மணி நேரம் தவித்த குட்டி யானை, ஐந்து மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே உள்ள கே.என்.ஆர்., தோட்டத் துக்கு மேற்புறம் டைகர்ஹில் காப்புக் காடு உள்ளது; இங்குள்ள பள்ளத்தில் விழுந்து காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாகவும், குட்டி யானை தனியாக தவித்துக் கொண்டிருப்பதாகவும், மாலை வனப்பகுதிக்குள் வசிக்கும் ஆதிவாசி மக்கள் நேற்று முன்தினம், குன்னூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட குன்னூர் வனத்துறையினர்,"தாய் யானையுடன் வந்து கொண்டிருந்த குட்டி யானை அருகே உள்ள ஓடையில் தண்ணீர் குடிப்பதற்காக சென்ற போது, அருகே இருந்த பாறை சந்தில் தவறி விழுந்து சிக்கியது; குட்டியை மீட்க முயன்ற தாய் யானை, அருகேயிருந்த 200 அடி"கிடு கிடு' பள்ளத் தில் தவறி விழுந்து இறந்தது,' எனக் கூறினர். நேற்று காலை காலை 7 மணிக்கு, கோவை கோட்ட வனப் பாதுகாவலர் உட்பட 25 பேர் கொண்ட வன அலுவலர்கள், அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கயிற்றின் உதவியால் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், வலை மூலம் தொட்டில் கட்டி, 800 அடி உயரத்தில் இருந்து காடுகள் சூழ்ந்த செங்குத்தான பாதையில், கீழ் நோக்கி யானையை தூக்கி வந்தனர். குட்டி யானை பிறந்து 20 நாட்கள் மட்டுமே ஆகியிருந்ததால், அது சோர்வடையாமல் இருக்க, கால்நடை டாக்டர் கலைவாணன், அவ்வப்போது குளுகோஸ், எலக்ட்ரோலைட் திரவத்தை கொடுத்து தெம்பு ஊட்டினார்; பின், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஐந்து மணி நேர போராட்டத்துக்கு பின், பகல் 12 மணிக்கு ஜீப் மூலம் முதுமலை யானைகள் சரணாலயத்துக்கு குட்டி யானை கொண்டு செல்லப்பட்டது. பள்ளத்தில் விழுந்து இறந்த தாய் யானை அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது.
தாயை இழந்த காட்டு யானை முகாம் யானையாகிறது: கடந்த 22ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு பாறைகள் சூழ்ந்த புதரில் சிக்கிய குட்டி யானை, நேற்று காலை 9 மணிக்கு மீட்கப்பட்டது; 37 மணி நேரம் குட்டி யானை தனிமையில் தவித்தது; வன அதிகாரிகள் கூறுகையில், ""காட்டில் வாழ்ந்த இந்த யானையை மனிதர்கள் தொட்டுவிட்டதாலும், மனிதர்களின் சுவாசக் காற்று யானை மீது பட்டுவிட்டதாலும், இந்த குட்டி யானையை மற்ற காட்டு யானைகள் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாது; குட்டி யானையை அரவணைக்க அதன் தாய் யானையும் இல்லாததால், முதுமலை யானைகள் சரணாலயத்துக்கு கொண்டு சென்று, முகாம் யானையாக மாற்ற பயிற்சி கொடுக்கப்படும்,'' என்றனர்.
0 comments:
Post a Comment